நெல்லையில் காதல் விவகாரத்தில் ஐ.டி. ஊழியர் கவின் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கொலை வழக்கில் பாளையங்கோட்டையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகனும், காவல் துறை பணியாளர்களின் மகனுமான சுர்ஜித் கைது செய்யப்பட்டார்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற காவலை பெற்றுள்ளனர். மேலும், இந்த வழக்கில் கவினின் காதலி சுபாஷினியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கவின் கொலை செய்யப்பட்டதுடன் தொடர்புடையது என கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் கொடூரமாக தாக்கப்படுவதை காண முடிகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து நீதிக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவுவதை அடுத்து, மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கண்காணிப்பு பிரிவு, இந்த வீடியோவுக்கு தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளது. அதில், “சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ, தமிழ்நாட்டைச் சேர்ந்ததல்ல. அந்த வீடியோ கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆகும். இது நெல்லை கவின் கொலை சம்பவத்துடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாதது. மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம், தவறான தகவல்களை பகிர வேண்டாம்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உண்மை தகவல்களை மட்டுமே பகிருமாறு அரசும், போலீசும் பொதுமக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.