2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு கட்டுப்பாடு நேரத்தை மீறி கடையை திறந்திருந்ததாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டு, காவலில் கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 9 போலீசாரை கைது செய்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணை நடந்து வந்தபோது, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாற அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். இதற்கு எதிராக, கொலையான ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பும், சிபிஐ தரப்பும் மனுதாக்கல் செய்து கடுமையான ஆட்சேபனைகள் பதிவு செய்தனர். வாதம் முழுமையாக முடிந்த நிலையில், ஸ்ரீதரின் தரப்பு “அரசு தரப்புக்கு சாதகமாக இருந்தால்தான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை தாமதப்படுத்தவே இந்த முயற்சி அல்ல” என தெரிவித்தது. ஆனால், ஜெயராஜ் – பெனிக்ஸ் குடும்பம், “ஸ்ரீதரின் மனுவை நிராகரிக்க வேண்டும். அவர் தான் இந்த கொலைக்குத் திட்டமிட்ட மூளை” என வலியுறுத்தியது. மேலும், வழக்கில் ஏற்கனவே 4 முக்கிய போலீசார் சாட்சியம் அளித்திருப்பதால், ஸ்ரீதரின் சாட்சியம் தேவையில்லை என வாதம் வைக்கப்பட்டது.

இந்த சூழலில், இன்று (ஆகஸ்ட் 4) மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றம், வாதங்களை பரிசீலித்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த அப்ரூவர் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இது ஜெயராஜ் – பெனிக்ஸ் குடும்பத்தினர் தரப்பில் எதிர்பார்த்த வெற்றியாகும். இந்த தீர்ப்புக்கு பிறகு, வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணை மற்றும் வழக்கு முடிவுகள் இன்னும் உறுதியுடன் நடைபெறும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.