திருவள்ளூர் பெரியபாளையம் கன்னிகைப்பேரில் உள்ள தனியார் கடல்சார் உணவு தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆலை நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்களே 9 தொழிலாளர்களின் மரணத்திற்குக் காரணம் என்றும், 18 வயதுக்குக் குறைவான பெண் தொழிலாளர்களைச் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், கடந்த 2025 டிசம்பருக்குப் பிறகு அதிகாரிகள் எந்த ஆய்வும் நடத்தவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், வடமாநில தொழிலாளர்களைக் கொத்தடிமைகள் போல் நடத்திச் சுரண்டுவதாகவும், இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே கூட்டு என்றும் வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2 லட்சம் இழப்பீடு மிகவும் குறைவானது என்றும், அதை உயர்த்தி ரூ.25 லட்சம் இழப்பீடு கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொழிற்சாலைகளுக்கான புதிய சட்ட திருத்தமே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என்பதால் அதை உடனே நீக்க வேண்டும் என்றும், இந்த கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஜூன் 25ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பெ.சண்முகம் தனது அறிக்கையில் அதிரடியாக அறிவித்துள்ளார்.
