நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள், கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வின் போது, விவசாயிகளின் சிபில் ஸ்கோர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் தாம் நேரில் முறையிட்டதையடுத்து தான் அந்த முறை ரத்து செய்யப்பட்டதாகவும், தற்போது விவசாயிகளுக்கு ஷிப்ட் முறைப்படி மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அதிமுக ஆட்சியில் சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு, மானிய தொகையும் அதிகமாக பெற்றுத் தரப்பட்டது எனவும் கூறினார்.
அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், விவசாயிகளுக்கு தடையின்றி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்த எடப்பாடி பழனிசாமி, நெல் கொள்முதல் தொகையை விவசாயிகள் நேரடியாக வங்கிக் கணக்கில் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர்கள் நேரில் முன்வைத்த கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அதற்கான தீர்வுகள் குறித்து தனது பார்வையை பகிர்ந்தார்.
