நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக தங்கியிருந்த தமிழ்நாடு எம்.பி. சுதா, இன்று காலை நடைப்பயிற்சிக்குச் சென்ற போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். சம்பவம் அதிகாலை 6.15 மணியளவில், டெல்லியின் சாணக்யபுரி பகுதியில் நடந்துள்ளது.

தன் தங்குமிடமான தமிழ்நாடு இல்லத்திலிருந்து மற்றொரு எம்.பி. சல்மாவுடன் நடைப்பயிற்சி சென்றபோது, ஹெல்மெட் அணிந்த மர்மநபர் ஒருவர் ஸ்கூட்டரில் அருகே வந்து, சுதாவின் கழுத்திலிருந்த நகையை பறித்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சுதாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டதுடன், அவரின் சுடிதார் கிழிந்துள்ளதாகவும், தன்னை நிலைதிருத்திக் கொண்டு கீழே விழாமல் சமாளித்ததாகவும் சுதா தெரிவித்துள்ளார்.

சம்பவத்துக்குப் பிறகு இருவரும் உடனடியாக உதவிக்காக கூவி அழைத்ததாகவும், சிறிது நேரத்திற்குப் பிறகு ரோந்து வந்த போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் எம்.பி. சுதா தெரிவித்தார். இதுகுறித்து உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ள சுதா, “பலத்த பாதுகாப்பு அமைந்துள்ள சாணக்யபுரியில் கூட இவ்வாறு நகை பறிப்பு நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது” எனக் கூறியுள்ளார். போலீசார் தற்போது மர்மநபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.