கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் மதிராப்பள்ளியைச் சேர்ந்தவர் அன்சில் (வயது 38). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோலாடு பகுதியைச் சேர்ந்த அதீனா (வயது 30) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால், இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்து வந்தனர். மேலும் அன்சில், அதீனாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று, அங்கு தங்கி இருந்ததும் தெரியவந்தது.
இந்தநிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி அன்சில், அதீனாவின் வீட்டுக்கு சென்று தங்கி இருந்துள்ளார். மறுநாள் அதிகாலை அன்சில் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக அதீனா அவரது நண்பர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நண்பர்கள், அன்சிலை மீட்டு உடனடியாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தொடக்கத்தில், இது தற்கொலை முயற்சி என கருதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிகிச்சை பெறும் நிலையிலும், அன்சில் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், அதீனாவே தனது உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்ததாக தெரிவித்தார். இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் சிகிச்சை பலனின்றி அன்சில் உயிரிழந்தார்.
இதனை அடிப்படையாக கொண்டு போலீசார் அதீனாவை கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், அன்சிலுக்கு உணவில் பூச்சிக்கொல்லி கலந்தது உண்மை என அதீனா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
அன்சிலுக்கும் அதீனாவுக்கும் இடையே நடந்த கோர சம்பவம் தற்போது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் நீண்டகாலமாக தொடர்பில் இருந்தாலும், எதற்காக அதீனா கொலை செய்தார் என்ற முக்கியமான கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. அதீனாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
