இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, மலானா-I நீர்மின் திட்டத்தில் உள்ள காஃபர் அணை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் அந்த அணையின் கீழுள்ள பகுதிகளில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

அதிர்ஷ்டவசமாக, இந்த நிகழ்வில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால் அணை இடிந்து விழும் தருணத்தைப் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில், வெள்ளம் பீறிட்டு வந்த நீரில் ஹைட்ரா கிரேன், டிப்பர் லாரி, பாறை உடைக்கும் இயந்திரங்கள், கார்கள் உள்ளிட்ட பல கனரக வாகனங்கள் அடித்து செல்லப்பட்ட  காட்சிகள் தெளிவாக உள்ளன.

மாநிலம் முழுவதும் 383 சாலைகள் இன்னும் மூடப்பட்ட நிலையில் உள்ளன. 747 மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளன. 249 குடிநீர் விநியோக அமைப்புகள் செயலிழந்துள்ளன. தொடர்ந்து பெய்த மழையால் இதுபோன்ற சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநில பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூன் 20 முதல் ஜூலை 31 வரை நடைபெற்ற மழைக்காலத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் மட்டும் 95 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அதே காலகட்டத்தில் சாலை விபத்துகளில் 78 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மண்டி மாவட்டத்தில் 14 பேர், சிம்லாவில் 10 பேர் மற்றும் சோலனில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சம்பவங்கள் தொடராமல் இருக்க, தடுப்பும் பாதுகாப்பும் கூடிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.