பரேலி: உத்தர பிரதேசம் பரேலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றும் ராஜீவ் என்பவர், தனது மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் திட்டமிட்டு செய்த கொலை முயற்சியில் இருந்து தற்செயலாக தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2009-ம் ஆண்டு சாதனா என்பவரை ராஜீவ் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பூர்வீக கிராமத்தில் சொந்த வீடு இருந்தாலும், மனைவி கிராம வாழ்க்கையை விரும்பாததால் நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்துவருகிறார். குழந்தைகள் அருகிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், தம்பதிக்குள் தொடர்ந்து ஏற்பட்ட குடும்ப தகராறுகள் தீவிரமான நிலையில் காணப்பட்டுள்ளன.
இந்தப் பின்னணியில், சாதனா தனது கணவரை கொல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக தனது சகோதரர்கள் ஐவரிடம் பேசி, அவர்களின் ஒப்புதலுடன் 11 பேர் கொண்ட கூலிப்படையை ஏற்படுத்தியுள்ளார். கடந்த ஜூலை 21-ம் தேதி இரவு, கூலிப்படை மற்றும் சாதனாவின் சகோதரர்கள் இணைந்து ராஜீவின் வீட்டில் புகுந்து, அவரை பயங்கரமாக தாக்கினர். தாக்குதலில் அவரது கை மற்றும் இரண்டு கால்கள் முறிந்த நிலையில், உயிருடன் புதைக்க திட்டமிட்டு, அவரை சி.பி.கஞ்ச் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு ராஜீவுக்காக குழி தோண்டி கொண்டிருந்தபோது, திடீரென அந்த வழியாக ஒருவரின் வருகை காரணமாக, 11 பேர் தங்கள் திட்டத்தை கைவிட்டு தப்பியோடினர். பின்னர், அங்கு வந்த நபர், உயிருடன் படுகாயமடைந்து கிடந்த ராஜீவை பார்த்து, உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தார். ராஜீவ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், ராஜீவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
