உத்தரப்பிரதேச மாநிலம் பாலியாவில் உள்ள சதார் கோட்வாலியில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் யோகேந்திர பகதூர் சிங், சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரியாவிடை நிகழ்ச்சியில், போலீசாரிடையே உணர்ச்சி பொங்கும் சூழ்நிலை உருவானது.

கடுமையான பணிநெறி மற்றும் கட்டுப்பாட்டுக்காக பெயர் பெற்ற யோகேந்திர சிங், தனது பிரிவை பொறுத்துக் கொள்ள முடியாமல் கண்ணீர்விட்டார். அவரது கீழ் பணியாற்றிய போலீசார் அவருக்கு மாலை அணிவித்து, கட்டிப்பிடித்து, அன்புடன் வழியனுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த இடமாற்றத்திற்கு பின்னால் நடந்த சம்பவமும் பெரிய விவாதத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, பாலியா மாவட்ட நீதிபதி அலுவலகத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) உறுப்பினர்கள், கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளை சந்திக்கச் சென்றிருந்தனர்.

அப்போது, இன்ஸ்பெக்டர் யோகேந்திர சிங், ABVP உறுப்பினர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீஸ் கண்காணிப்பாளர் ஓம்வீர் சிங், யோகேந்திர சிங் மீது நடவடிக்கை எடுத்து இடமாற்றம் செய்ததாக தெரிவித்தார்.

இந்த விவகாரத்துக்குப் பின்னால் பலரிடையே கலவையான கருத்துகள் எழுந்துள்ளன. சிலர், “அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கு நடவடிக்கை அவசியம்” எனக் கூறினாலும், பலர் யோகேந்திர சிங்கின் ஒழுக்கம் மற்றும் நேர்மையை பாராட்டி, அவரது இடமாற்றம் வேதனையளிக்கிறது எனக் கூறுகிறார்கள்.

“அவர் தந்தை போன்றவர், குடும்பத்தோடு பணியாற்றும் அனுபவம் கொடுத்தார்” என சகபணியாளர்கள் தெரிவித்தனர். வைரலான வீடியோவில், அவரது பிரிவைத் தாங்க முடியாமல் காவலர்கள் கண்ணீர் வடிக்கும் காட்சிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.