அகமதாபாத்தில் உள்ள பைராம்ஜி ஜீஜீபாய் மருத்துவக் கல்லூரி (BJMC) வளாகத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் 171 மோதிய பயங்கர விபத்தில் நான்கு மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இதனால் வகுப்புகள் 11 நாட்களுக்கு நிறுத்தப்பட்டன. மாணவர்களும், ஆசிரியர்களும் இழப்பை தாங்க முடியாமல் துயரத்தில் மிதக்கின்றனர். விமான விபத்தின் தாக்கம் இன்னும் பிஜேஎம்சி வளாகத்திலிருந்து நீங்கவில்லை.
மருத்துவ மனநலப் பேராசிரியர் டாக்டர் நிஷா பிரஜாபதி கூறுவதாவது, “விமானம் புறப்படும் ஒவ்வொரு முறையும் நாங்கள் மேலே பார்க்கிறோம். அந்த சத்தம் எங்களுக்குள் மறைந்துள்ள அதிர்ச்சியைக் கிளப்புகிறது. அதைப் பற்றிய நொண்டி நகைச்சுவைதான் எங்களின் சமாளிக்கும் வழி.” என்கிறார். விபத்துக்கு பின்னர் மாணவர்களுக்கு மனவளர்ச்சி மற்றும் PTSD நிலைகளை கையாள மனநல கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. மேலும், இறந்த மாணவர்களின் அறைகளில் மீண்டும் மற்றவர்களை இருக்க விடாமல் மாற்றியமைக்கப்பட்டது. பல மாணவர்கள் வீடு திரும்பியும், தற்போது படிப்படியாக மீண்டுவருகின்றனர்.
விபத்தில் அழிந்த உணவகத்திற்கு பதிலாக புதிய இடத்தில் தற்காலிக மெஸ் திறக்கப்பட்டது. முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர் என கூறும் டாக்டர் கவின், “இறுதி ஆண்டு மாணவர்கள் பிரேத பரிசோதனைகளில் பழகியிருந்தாலும், இளையவர்கள் இழப்பை தாங்க முடியாமல் தவித்தனர்” என்றார். மாணவர்கள் மீளும் நம்பிக்கையில், தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.
“இது எங்கள் வாழ்க்கை, அதிலிருந்து ஓடிவர முடியாது” என்கிறார் டாக்டர் நிஷா. உயிரிழந்த 19 பேரின் நினைவுகள், விழியின் முன் மின்னிக்கொண்டே இருக்கின்றன. கல்லூரி வளாகத்தின் நடுவே இருக்கும் விபத்து இடம் தற்போது காவல்துறையினரால் 24 மணி நேரமும் பாதுகாக்கப்படுகிறது.
