மும்பை அருகே உள்ள நல்லசோபாரா பகுதியில் செயல்படும் ஹோவர்ட் இங்கிலீஷ் பள்ளியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியின் ஆசிரியை நிதா நிசாவுத்தீன், வகுப்பறையில் கெட்ட வாசனை வருகிறது என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி, 8 வயது மாணவனின் அந்தரங்க உறுப்பில் கண்ணாடி சுத்திகரிப்பு திரவத்தை தெளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஜூலை 23ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. மாணவனின் பெற்றோர் இது குறித்து பள்ளியிடம் மன்னிப்பு கோரி முறையிட்டதோடு, அதிகாரப்பூர்வ புகாரும் அளித்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதுடன், பெற்றோர்களும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விசாரணை நடத்திய மாநில கல்வித் துறை, இந்த பள்ளி சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படாததும், மற்றொரு பள்ளியின் பெயரில் விலகல் சான்றிதழ்கள் (Leaving Certificate) வழங்கி வந்ததும் தெரியவந்ததால் உடனடியாக பள்ளியை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பால்கர் மாவட்ட துணை கல்வி அலுவலர் கூறுகையில், “பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  உத்தரவை மீறி பள்ளி இயங்கினால், போலீசில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்” என்று எச்சரித்தார்.

மாணவனின் தாயார், “என் மகனுக்கு நீதி கிடைக்கவேண்டும். இதுபோன்ற செயல் வேறு எந்தக் குழந்தைக்கும் நேரக்கூடாது” என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.