அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல வருடங்களாக தான் கண்ட கனவு திட்டம் ஒன்றை இப்போது நடைமுறைக்கு கொண்டுவருகிறார். வெள்ளை மாளிகை வளாகத்தில் ரூ.1,800 கோடி மதிப்பில் (அதாவது சுமார் $200 மில்லியன்) ஒரு புதிய பிரமாண்ட நடன அரங்கம் (Ballroom) கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளன. நிதி முழுமையாக டிரம்ப் மற்றும் தனியார் நன்கொடையாளர்களால் வழங்கப்படும் என வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்தார்.
புதிய நடன அரங்கம் வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியில், தற்போதைய மெலனியா டிரம்ப் அலுவலகம் அருகே அமைக்கப்படும். இது சுமார் 90,000 சதுர அடியில் கட்டப்படவுள்ளதுடன், 650 பேர் அமரக்கூடிய வசதியுடன் இருக்கும். தற்போதைய கிழக்கு அறையில், அது வெறும் 200 பேர் மட்டுமே அமரக்கூடியது என்பதால், பெரிய நிகழ்ச்சிக்கு இடமில்லை என்ற குறைகளைத் தொடர்ந்து டிரம்ப் இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.
டிரம்பின் 2016 கனவு இப்போது நனவாகிறது:
இதே வகை நடன அரங்கம் ஒன்றை 2016ம் ஆண்டு, தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் முன்மொழிந்திருந்தார். அந்தச் சமயத்தில் பராக் ஒபாமா நிர்வாகம் திட்டத்தை ஏற்கவில்லை. ஆனால் தற்போது, ஜனாதிபதியாக தானே பதவியில் இருப்பதால், தனது கனவை செயல்படுத்தும் நிலையில் டிரம்ப் உள்ளார்.
கடந்த 150 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் ஒரு நிரந்தர பெரிய நிகழ்வுத் தளம் வேண்டுமென்று கோரிக்கை எழுந்துவந்தாலும், எந்த நிர்வாகமும் அதை நடைமுறைக்கு கொண்டுவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, டிரம்ப் நிர்வாகம் தான் இந்த திட்டத்தை முடிக்கபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் கனவு நனவாகும் நிகழ்வாக, இந்த நடன அரங்கு வெள்ளை மாளிகை வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டுமான முயற்சியாகக் கருதப்படுகிறது.
