மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூர் மாவட்டம் செரிடல் பகுதியில் உள்ள கினி மொஹல்லாவைச் சேர்ந்த ஹீராபாய் சவுத்ரி (வயது 70), தனது இரண்டு பேத்திகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த இரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், ஹீராபாயின் கைகளை, கால்களை கட்டி கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். மேலும், அவரது மூத்த பேத்தியை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியின் எதிர்ப்புக்கு எதிராக அவர் தாக்குதலும் மேற்கொண்டுள்ளார்.
கொலை மற்றும் வன்கொடுமை சம்பவம் கடந்த ஜூலை 28ஆம் தேதி நடந்துள்ளது. மறுநாள் காலை, கதவு திறந்திருப்பதையும், ஹீராபாய் மரணமடைந்த நிலையில் கிடப்பதையும் உறவினர்கள் பார்த்துள்ளனர். போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஹீராபாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில், பேத்திகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொடூர செயலை சுஹாகியில் வசிக்கும் ராகுல் குஷ்வாஹா என்ற பிரதிக் குஷ்வாஹா என்பவர்தான் செய்ததாக தகவல் கிடைத்தது.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ராகுல் குஷ்வாஹா ஏற்கனவே திருமணமானவர் என்றும், பல மாதங்களாக அந்த மைனர் சிறுமியை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. சிறுமி இதற்கு மறுத்ததையடுத்து, அவர் இரவில் வீட்டுக்குள் நுழைந்து முதலில் சிறுமியின் கைகள், கால்களை கட்டி விட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் எதிர்ப்பு தெரிவித்த பாட்டியை கொலை செய்து தப்பியோடினார். மேலும், இது குறித்து வெளியே சொல்லினால் உங்கள் குடும்பமும் அதே நிலைதான் என மிரட்டியதும் உறுதியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஜபல்பூர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் எஸ்பி சூர்யகாந்த் சர்மா கூறும்போது, இது மனிதாபிமானமற்ற கொடூரமான குற்றமாகும் எனக் கண்டனம் தெரிவித்தார். சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, குற்றவாளியை போலீசார் விரைவில் கைது செய்தனர். அவர்மீது கொலை, பாலியல் வன்கொடுமை, மிரட்டல், கடத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. FSL மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு அந்தப் பகுதியில் மக்கள் பீதியுடன் வாழ்கின்றனர்.
