ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் துக்கலி அருகே ஜிகவா சிந்தில்கொண்டா பகுதியில் உள்ள ஒரு பெண் விவசாயி, சமீபத்தில் தனது நிலத்தில் உழவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, நிலத்திலிருந்து மின்னும் வகையில் ஒரு சிறிய கல் கண்ணில் பட்டது.
அதை எடுத்து பார்த்தபோது, அது வைரம் என்பது தெரியவந்தது. திடீரென கிடைத்த இந்த வைரம் அவரை ஒரு நாளில் வாழ்கை மாற்றிய அதிர்ஷ்டசாலியாக மாற்றியது.
இந்த தகவல் கிராமத்திலேயே பரவியதுடன், சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. பலர் அந்த வைரத்தை வாங்க முன்வந்தனர். ஆரம்பத்தில் அந்த பெண் விவசாயி வைரத்தின் விலையை ரூ.18 லட்சம் என கூறினார்.
ஆனால், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, அதை ரூ.8 லட்சத்திற்கு வாங்க பேரம் பேசினர். இந்த சூழ்நிலையில், சென்னம்பள்ளியை சேர்ந்த ஒரு தனியார் வைர வியாபாரி ரூ.13.5 லட்சத்திற்கு அதை வாங்கி சென்றார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பகுதியில் வைரக்கற்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பலரும் தங்கள் நிலங்களை பரிசோதித்து பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஒரே நாளில் வாழ்கை திருப்பமாகும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
