ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று காலை ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடுகள் முழுவதற்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் கடலோரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடல் பகுதியை சேர்ந்த பெரு, ஈக்வதோர், சாலமன் தீவுகள், ஹவாய், அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கிரசென்ட் சிட்டி உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் உயர் ஆபத்துடைய பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடலோர நகரங்களில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்குப் செல்லவும், அலறல் அலைகள் எழும் வாய்ப்பு இருப்பதால் கடற்கரையிலிருந்து விலகி இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை மையங்கள், ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச அமைப்புகள் கண்காணிப்பை தீவிரமாக செய்து வருகின்றன. ரஷ்யா, ஜப்பான் பகுதிகளில் ஏற்கனவே சுனாமி அலைகள் கரையை கடந்து தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா உள்ளிட்ட நாடுகளும் உயர் விழிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பசிபிக் கடலோர நாடுகள் அனைத்தும் தற்போது மிகுந்த பீதி நிலைமையில் உள்ளன.
