உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதலிடத்தில் இருந்தது. அதிக மக்கள் தொகையால் ஏற்பட்ட சிக்கல்களை கட்டுப்படுத்த, பல தடை விதிகளை அரசு இயற்றி வந்தது.

குறிப்பாக, ஒரே குழந்தை கொள்கையை கடுமையாக பின்பற்றி வந்த நிலையில், தற்போது அந்த முடிவுகளால் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருவதை அரசே வெளிப்படையாகக் கூறியுள்ளது. இந்நிலையில், மக்கள் தொகை சரிவால் கவலையில் உள்ள சீனா, அதனை திரும்ப உயர்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அதற்கான ஒரு முயற்சியாக, குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை சீன அரசு தற்போது அறிவித்துள்ளது. 2025 ஜனவரி 1 முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், ஆண்டுக்கு 3,600 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.50,000) மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படும். அதாவது, ஒரு குழந்தைக்கு மொத்தமாக ரூ.1.30 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சீன இளைஞர்கள் திருமணத்திலும் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.

இதற்கான முக்கிய காரணங்களாக பெரும் கல்விச்செலவு, குழந்தைப் பராமரிப்பு சுமை மற்றும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை ஆகியவைக் குறிப்பிடப்படுகின்றன. இந்நிலையில், சோதனைகள் பல கடந்துவந்த சீன அரசு, மக்கள் தொகை சரிவை தடுக்க நிதி ஊக்கத்திட்டங்கள், வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் குடும்ப நலத்திட்டங்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக உள்ளது.