திருவள்ளூர் அருகே பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி , மோசமான முறையில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சோகமான சம்பவம், தமிழகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 14 நாட்கள் நீடித்த தீவிர தேடலுக்குப் பிறகு சந்தேக நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ராஜ் விஸ்வகர்மா என்ற வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆந்திராவின்  அருகே உள்ள சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் மதுபோதையில் கிடந்த அவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில், அவர் சிறுமியின் வாயை கையால் மூடி, கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல என்றும், பெண்களை நோட்டமிடும் மனநோய்க்கூறு கொண்ட சைக்கோவாக இருக்கிறார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராஜ் விஸ்வகர்மா, ஒரு தாபா உணவகத்தில் வேலை செய்து வந்ததுடன், சனிக்கிழமைகளில் அதிகமாக மது அருந்தி பிறகு அசம்பாவித செயல்களில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது. கைது செய்யும் போது கூட தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகவும் போலீசார் கூறினர். சிறுமியின் துணிவும் தைரியமும் காரணமாகவே குற்றவாளி உயிருடன் பிடிக்க முடிந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது குற்றவாளி ராஜ் விஸ்வகர்மா நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.