அரியானா மாநிலம் சோனிபத் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (30) என்பவர் சி.ஆர்.பி.எப். – ல் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இந்த நிலையில் விடுமுறையின் காரணமாக கிருஷ்ணன் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
நேற்று இவரை அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இதனால் கிருஷ்ணன் துடி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்பு கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சில நாட்களுக்கு முன்பாக கன்வர் யாத்திரையின் போது கிருஷ்ணனுக்கும், அங்கிருந்த சில இளைஞர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிய வந்தது.
இந்த நிலையில் கிருஷ்ணனை பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த இளைஞர்கள் அவர் ஊருக்கு வந்ததை அறிந்து கொண்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் உண்மை என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் அந்த இளைஞர்கள் மீது சந்தேகம் இருப்பதால் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
