பிரதமர் நரேந்திர மோடி இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் பங்கேற்றுள்ளார். மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாளையும், தென்கிழக்கு ஆசிய கடல் பயணத்தின் 1000-வது ஆண்டு நிறைவையும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டுமானத்தின் தொடக்கத்தையும் கொண்டாடும் விதமாக ஜூலை 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ஆடி திருவாதிரை விழா நடைபெற்றது.

இன்று பிரதமர் மோடி சோழவந்தம் ஏரிக்கு அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக ஹெலிபேட்டில் வந்து இறங்கினார். வழிநடுக சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருக்கும் மக்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரருக்கு பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு செய்துள்ளார்.

பின்னர்  கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் பிரதமர் மோடி மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது, பிரிட்டனுக்கு முன்பாகவே ஜனநாயக ரீதியில் குடவோலை முறை ஆட்சி செய்தவர்கள் சோழர்கள். உலகின் வன்முறை சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் பாதையை சைவ சித்தாந்தம் நமக்கு காட்டுகிறது. அன்பே சிவம் என்ற திருமூலரின் கோட்பாடை உலகம் முழுவதும் கடைபிடித்தால் பிரச்சனைகள் தானாக தீரும்.

ராஜேந்திர சோழன் புனித கங்கை நீரை எடுத்து பொன்னேரியை நிரப்பினார். காசியில் இருந்து கங்கை நீரை மீண்டும் கொண்டு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சிவ முழக்கத்தை கேட்கும் போது பரவசமாக உள்ளது. இளையராஜாவின் இசையாளும், ஓதுவார்கள் பாடல்களாலும் ஆனந்தமடைந்தேன்.

பாரதத்தின் எதிரிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தோம். நாம் வளர்ச்சி அடைந்த தேசத்தை உருவாக்க ஒற்றுமையாக இருக்க வேண்டும். நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்த பகுதியை சிவசக்தி என பெயர் சூட்டினோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.