பீகார் மாநிலம் பெட்டையா அருகே உள்ள கிராமத்தில் மாதேஸ்வரி தேவி என்பவர் வசித்து வருகிறார். சமையலுக்காக அடுப்பில் எரிக்க தேவையான குச்சிகளை தேடி வனப்பகுதிக்கு சென்ற மாதேஸ்வரி, தனது 1 வயது மகனான கோவிந்தாவை பாட்டியிடம் விட்டு சென்றிருந்தார். இந்த நேரத்தில் வீட்டுக்குள் நாக பாம்பு ஒன்று ஊர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

குழந்தை கோவிந்தா பாம்பை பொம்மையாக எண்ணி அது அருகில் வந்தபோதும் பயப்படாமல் அமைதியாக இருந்தான். சிறிது நேரத்திற்குள் அந்த பாம்பு குழந்தையின் கையில் கொடி போல் சுற்றியது. அங்கிருந்து பாம்பு  விலக முயற்சி செய்தபோதும், குழந்தை அதனை விளையாட்டு பொருளாக நினைத்து கையில் எடுத்து தன் பற்களால் அந்த பாம்பை கடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த திடுக்கிடும் சம்பவத்தில், குழந்தை கடித்ததால் பாம்பு உடனடியாக இறந்து விட்டது. பின்னர் குழந்தை கோவிந்தா சுயநினைவு இழந்ததால், அதை கண்ட பாட்டி மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்தவர்கள் பரிசோதித்தபோது, பாம்பு குழந்தையை கடிக்கவில்லை என்றும், விஷம் குழந்தையின் உடலில் ஏறவில்லை என்றும் உறுதி செய்துள்ளனர்.

குழந்தை கோவிந்தா தற்போது மருத்துவ குழுவின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறான். பொதுவாக நாக பாம்பு கடித்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சில மணிநேரத்தில் விஷம் பரவி உயிரிழக்கும் நிலை ஏற்படும். ஆனால், குழந்தையை அது கடிக்கவில்லை என்பதும், மாறாக குழந்தை பாம்பை கடித்து உயிரிழக்க வைத்தது என்பதும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கிராம மக்கள் “தெய்வீகத் திறன் உள்ள குழந்தை” என கூறி வருகின்றனர்.