தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில், இன்று (ஜூலை 27) மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும், மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது மேற்கு வங்க கடலோரப் பகுதியில் நீண்டுவந்துள்ளதாகவும், அதேசமயம் அரபிக்கடல் பகுதியில் மகாராஷ்டிரா – கேரளாவுக்கு அப்பால் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஜூலை 31ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
