ஓமனின் மஸ்கட்டில் இருந்து நேற்று முன்தினம் மும்பை நோக்கி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அதிகாலை 3.15 மணியளவில் நடுவானில் பறந்தபோது, அதில் பயணித்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக விமான பணியாளர்கள் கேபினில் சிறிய அறையை தயார் செய்தனர். விமானி, மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அதே விமானத்தில் இருந்த நர்ஸ் ஒருவர், பணிப்பெண்கள் உதவியுடன் பிரசவம் பார்த்து, அழகிய ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுக்க உதவினார்.
இந்த விசேஷத்தை பார்த்த பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். விமானம் மும்பையில் தரையிறங்கியதும், தாய் மற்றும் சேய் இருவரும் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரின் உடல்நிலை நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாய்லாந்து தூதரகத்துடன் தொடர்ந்த தொடர்பு கொண்டு, அனைத்து தேவையான உதவிகளும் செய்யப்படுவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
