கடலூர் மாவட்டம் புதுபிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த காசிலிங்கம்(75) என்பவர் நிலக்கடலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் ராஜா(45) விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இதனால் ராஜா ஒரு வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார்.

கடந்த வாரம் ராஜா கடலூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ராஜா வெளியே சென்ற நேரத்தில் காசிலிங்கம் வீட்டின் மேல் தளத்தில் அமைந்துள்ள ராஜா வீட்டிற்கு சென்று மின்விளக்கு ஏற்றிவிட்டு கீழே வந்து தூங்கிவிட்டார்.

பின்பு மறுநாள் காலை விளக்கு அமைப்பதற்காக காசிலிங்கம் மேல்தளத்திற்கு சென்றபோது ராஜாவின் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காசிலிங்கம் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தது.

எனவே இது குறித்து காசிலிங்கம் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்தபோது பீரோவில் இருந்து 152 பவுன் நகை மற்றும் 30 லட்சம் ரொக்க பணம் அனைத்தையும் திருடு போயிருந்தது.

எனவே இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மோப்ப நாய்களை வரவழைத்து ஆய்வு செய்தனர். மேலும் தடவியல் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து வீட்டை சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.