ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள், மாமனார், மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவரது 65 வயதான மாமனார், மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அதிர்ச்சியடைந்த இளம்பெண், இந்த விவரத்தை தனது கணவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து மாமனார் வெளியூருக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. “தந்தை ஊருக்கு வந்ததும் கண்டிப்பாக பேசுவேன்” என்று கூறிய கணவர், எந்த நடவடிக்கையும் எடுக்காதது காரணமாக மனமுடைந்த அந்த இளம்பெண், அதே நாளின் இரவில் வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். தீ பரவியதால், அவர் அலறிய குரலுக்கு ஓடி வந்த குடும்பத்தினர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலத்த தீக்காயங்களால் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தபோது, அவர் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், மாமனார் தனது மரியாதையை கெடுத்ததாகவும், அதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, தற்கொலைக்கு காரணமானதாக கருதப்படும் மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அதேசமயம், தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் கணவர் முனீஸ்வரன், மாமியார் சூரம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம், அப்பெண்ணின் இரு குழந்தைகளை தாயில்லா நிலையிலும், சமூகத்தை அதிர்ச்சிக்கும் நிலைக்கும் கொண்டு சென்றுள்ளது.