புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 5-ஆம் தேதி 17 வயது சிறுமியை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் கடத்தி சென்றதாக சிறுமியின் தாய் ஷர்மிளா, சிறுமியின் சித்தப்பா முகமது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது வில்லியனூர் காவல் உதவி ஆய்வாளரான சரண்யா பல மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12 மணிக்கு விசாரணையை தொடங்கியதாக தெரிகிறது. மகள் காணாமல் போனதை அறிந்ததும் சிறுமியின் தந்தை முகமது ரபிக் வெளிநாட்டிலிருந்து ஜூன் 6-ம் தேதி புதுச்சேரிக்கு வந்து காவல் நிலையத்திற்கு சென்றார்.

அப்போது சரண்யா முகமது ரபீக்கை தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியதாக தெரிகிறது. சிறுமியை கடத்தி சென்ற வாலிபரின் சிக்னல் முதலில் கேரளாவிலும், பின்னர் மகாராஷ்டிராவில், அடுத்து அசாமிலும் கண்டறியப்பட்டது.

இதனால் சரண்யா சிறுமியை தேடி செல்வதற்கு பணம் வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதனால் சரண்யா அசாமில் இருந்தபோது முகமது ரபிக் ஜிபே மூலம் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஆறாம் தேதி சிறுமியை கண்டுபிடிக்க சரண்யா சட்ட விரோதமாக ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக டிஜிபி அலுவலகத்தில் முகமது ரபீக் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து டிஜிபி ஷாலினி சிங் சரண்யாவை பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். அவருக்கு உடந்தையாக இருந்த சரண்யாவின் கணவர் பாகூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.