பாலியல் உறவுக்கான சம்மத வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மையமாகக் கொண்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசுக்கும் நிபுன் சக்சேனா என்பவருக்கும் இடையில் தொடரப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் நியமிக்கப்பட்டார். அவர் தனது எழுத்துப்பூர்வ கூற்றை தாக்கல் செய்து, தற்போதைய சட்டத்தின் மீது கடும் விமர்சனம் எழுப்பினார்.

அவரது கூற்றுப்படி, 70 ஆண்டுகளாக பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கான வயது வரம்பு 16 ஆகவே இருந்து வந்தது. ஆனால் 2013-ல் கொண்டு வந்த குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மூலம், எந்த விவாதமும் நடத்தாமலும், நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரைகளை புறக்கணித்தவாறே, அந்த வயதுவரம்பு 18 ஆக உயர்த்தப்பட்டது. இதற்குப் பின்னால் எந்த பகுத்தறிவோ, புள்ளிவிவர ஆதாரங்களோ இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய இளம் தலைமுறையினர் முன்கூட்டியே பருவம் எய்தி, காதல் மற்றும் பாலியல் உறவுகள் குறித்த முடிவுகளை தாங்களே எடுக்கக்கூடிய பரிபக்தியுடன் இருக்கின்றனர். ஆனாலும், அவர்களுக்கிடையே பரஸ்பர சம்மதத்துடன் உருவாகும் உறவுகள் கூட தற்போதைய சட்டத்தின்படி “குற்றம்” எனக் கருதப்படுகிறது. இது அவர்களின் சுதந்திரத்தையும், கல்வியையும் பாதிக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில், 2017 முதல் 2021 வரை, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட போக்சோ வழக்குகள் 180% வரை அதிகரித்துள்ளன. இதில் பெரும்பாலான புகார்கள், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் விருப்பம் இல்லாமல், சாதி அல்லது மத வேறுபாடு காரணமாக பெற்றோரால் அளிக்கப்பட்டவை என தகவல் வெளியாகியுள்ளது.

இது போன்ற love-affair சம்பவங்களில், சம்மதத்துடன் நிகழ்ந்த உறவுகள் குற்றமாக்கப்படுவது சட்டமுறை சிக்கல்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, இளம் மாணவர்கள் கல்வியை தொடர முடியாமல், நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்கிறார்கள். எனவே, 16 முதல் 18 வயதுக்குள் உள்ளோருக்கான காதல் மற்றும் சம்மத உறவுகளை போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாக்கக்கூடாது என இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மும்பை, சென்னை, மேகாலயா ஐகோர்ட்டுகளும் சம்மத உறவுகளுக்கு விசேஷமாகச் சட்டம் தனி பார்வையிலிருப்பதன் அவசியத்தை முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும், சுப்ரீம் கோர்ட்டும் இதனை ஏற்க வேண்டும் என அவர் தெரிவித்தார். இளம் வயதினரின் உடல்நிலை, சுதந்திரம், மற்றும் மனபூர்வ விருப்பங்களை மதிக்க வேண்டும் என்பதே அவரது வாதமாகும்.

இந்நிலையில், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதிலில், பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18-க்கு கீழ் குறைக்கப்பட முடியாது என்று உறுதியாகத் தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 18 வயது வரம்பு, குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் நாடாளுமன்றம் கவனமாக எடுத்த தீர்மானமாகும் என்றும், இது இந்திய அரசியலமைப்பின் கீழ் உள்ளார்ந்த பாதுகாப்பாகும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. எனவே, சம்மத வயது குறைப்பது சாத்தியமில்லை என மத்திய அரசு நிச்சயமாக கூறியுள்ளது.