அசாம் மாநிலம் ஹாசன் மாவட்டம் பெடகேரி பகுதியைச் சேர்ந்த ஜோதிஷா தாஸ் (30), அங்கு உள்ள பொதுப்பணித்துறையில் (PWD) உதவிப் பொறியாளராக பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் பதவி உயர்வு பெற்ற அவர், பொங்கைகானி பகுதியில் நிர்வாகப் பொறியாளராக பணியில் இருந்தார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் தனது வாடகை வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு முன்னதாக ஜோதிஷா எழுதிய கையால் எழுதப்பட்ட கடிதத்தில், “முழுமையடையாத கட்டடங்களுக்கு பில் ஒப்புதல் அளிக்க இரண்டு மூத்த அதிகாரிகள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தனர். அலுவலகத்தில் எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை. என் வேலை மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. என் பெற்றோர் எனக்காக கவலைப்படுகிறார்கள்” என கூறியுள்ளார். மேலும், தினேஷ் மேதி சர்மா மற்றும் SDO அமினுல் இஸ்லாம் ஆகியோர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிஷாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்குள்ளான இருவரும் தற்கொலைக்குத் தூண்டுதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கட்டிட வேலைகள் குறித்து மறு மதிப்பீடு செய்யப்படும் எனவும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “இது மிகக் கவலைக்குரிய நிகழ்வு. விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார். அரசு துறைகளில் பணியாற்றும் நபர்கள் மீது மேலதிக மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வட்டாரங்களில் எழுந்துள்ளது.
