தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் குறித்து அப்போலோ மருத்துவமனை இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதயத் துடிப்பில் சில மாறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அதனால்தான் தலைசுற்றல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதயநோய் நிபுணர்  தலைமையிலான மருத்துவ குழு ஆலோசனையின் பேரில், இன்று காலை அவசியமான மருத்துவ முறைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஆஞ்சியோகிராம் சோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்றும், பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருந்ததாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. தற்போது முதலமைச்சர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், இன்னும் 2 நாட்களில் அவர் தனது வழக்கமான பணிகளை மீண்டும் தொடரவிருக்கிறார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரண்டு நாளில் வீடு திரும்புகிறார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பூரண நலம் பெற்று நீடூடி வாழ வேண்டும். மக்கள் பணிகளை மீண்டும் தொடர்ந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.