கர்நாடக மாநிலம் கதக் டவுன் பெடகேரி பகுதியைச் சேர்ந்த விஷால் குமார் (26), அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் காதலித்து வந்தார். இருவரும் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆரம்பத்தில் பெண்ணின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், 2024ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பெண்ணின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், விஷாலை முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்ய வற்புறுத்தினர். இதை ஏற்றுக்கொண்ட விஷால், 2025 ஏப்ரல் 25-ம் தேதி முஸ்லிம் முறைப்படி மீண்டும் திருமணம் செய்துகொண்டார். ஆனால், மதம் மாற்றம் செய்ய அவர் மறுத்தார்.
இந்த நிலையில், பதிவு திருமண ஆவணத்தில் விஷாலின் பெயர், விராஜ் சாப் என மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, விஷால் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, பெண்ணின் குடும்பத்தினர், “இந்துமதத்தை விட்டு விலகவேண்டும்” என்று வற்புறுத்தியதாகவும், மதம் மாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியதாகவும் கூறி, விஷால் குமார் கதக் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மனைவி விஷால் குமாருக்கு எதிராக புதிய புகாரை அளித்துள்ளார். அதில், “திருமணத்திற்கு முன்பே காதலிக்கும்போது எனக்கு 17 வயது தான். இந்த விஷயத்தை அறிந்திருந்தும், திருமணம் செய்வதாக கூறி என்னை வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு உட்படுத்தினார்” என்று குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார், விஷால் குமார் மீது பாக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இருவருக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடக்கத்தில் மதம் மாற்றம் தொடர்பாக புகார் அளித்த விஷால் குமார், தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாக, சட்ட ரீதியாக பிரதான நெருக்கடியில் சிக்கியுள்ளார். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
