தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான ‘மாரீசன்’ திரைப்படம், வடிவேலு மற்றும் மலையாள முன்னணி நடிகர் ஃபஹத் பாசில் இணைந்து நடித்திருக்கும் படமாகும். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ளார். கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, லிவிங்ஸ்டன், ரேணுகா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிராமிய பின்னணியில் நகரும் டிராவலிங் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. படம் நாளை (ஜூலை 25) வெளியாக உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஃபஹத் பாசில் தனது தமிழ் சினிமா அனுபவங்களை பகிர்ந்தார். அதில் அவர் கூறியதாவது, “நான் முதல் முறையாக தியேட்டரில் பார்த்த தமிழ் படம் ‘பாட்ஷா’. என் நண்பர்களுடன் ஸ்கூலை கட் அடிச்சிட்டு போயி பார்த்தோம். ‘என் பேரு மாணிக்கம்… எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ அப்படின்னு வரும் வசனங்கள் நெஞ்சை பதைக்கும் வகையில் இருந்தது. ரஜினி சாரை பார்த்து மெய் மறந்து ரசித்தேன்” என தனது ஃபேனிசம் குறித்து கூறினார்.

‘மாரீசன்’ படத்தில் ஃபஹத் பாசிலின் பாணியும், வடிவேலுவின் நகைச்சுவையும் இணைந்து வரும் விதத்தில், ரசிகர்கள் மத்தியில் இப்படம் பலம் பெறும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சினிமா விமர்சன வட்டாரத்திலும் இந்த கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கிராமிய கதையைத் தழுவி சஸ்பென்ஸ், நகைச்சுவை கலந்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், பார்வையாளர்களிடம் என்ன அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு நாளை வெளிவரும் படம் முடிவை தரும்.