தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது 74-வது வயதிலும் இளைஞர்களை வியக்கவைக்கும் அளவில் சுறுசுறுப்புடன் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், ரஜினியுடன் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவிற்கு உள்ள நட்பு குறித்து அவரது உருக்கமான பேச்சு ரசிகர்களை ஈர்த்துள்ளது.

“ரஜினியை முதன்முதலில் மெட்ராஸ் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் சந்தித்தேன். அப்போது எங்களுக்கும் ஒன்றும் இருக்கவில்லை. அதே நேரத்தில் அந்த சந்திப்பு நாங்கள் இணைந்த தருணமாக அமைந்தது. அந்த தருணத்திலிருந்து இன்று வரை 50 வருடங்களாக எங்களுக்குள் நட்பு தொடர்ந்து வருகிறது” என கூறிய மோகன்பாபு, ரஜினியை எங்கு பார்த்தாலும் “பிளடி தலைவா!” என்றே தான் அழைப்பதாக உருக்கமுடன் தெரிவித்தார்.

மேலும், “நான் யாருக்காகவும் போலியாக நடிக்க மாட்டேன். ரஜினியிடம் என்னுடைய உண்மை உணர்வைத் தான் காட்டுவேன். அதுதான் எங்கள் நட்பின் அடையாளம். அது அவருக்கும் நன்றாகவே தெரியும்” என கூறியுள்ள மோகன்பாபு, ரஜினிக்கு கிடைக்கும் மரியாதை, சாதனைகளுக்கு காரணம் அவரது மனப்பாங்கு தான் என்றும் குறிப்பிடினார். இந்த பேச்சு ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.