தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் மனித வாழ்க்கை எளிமையாகியுள்ளதுடன், அதே சமயம் இந்த வளர்ச்சியை தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் சிலர், பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபடுகிறார்கள். அதில் மிகவும் ஆபத்தானதாக பரவி வரும் ஒன்று தான் ‘டிஜிட்டல் கைது’ எனப்படும் மோசடி. இதில், தங்களை சி.பி.ஐ., அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறும் மோசடிக்காரர்கள், வீடியோ கால் மூலம் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

இந்த மோசடியில் சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த இரு பெண்கள் சிக்கி பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா   மற்றும்  ப்ரியா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) எனும் இருவரும், தங்களிடம் தனிப்பட்ட ஆவணங்களை கூறியதால் உண்மையாக நம்பி, மோசடிக்காரர்களிடம் வீடியோ கால் வழியாக பேச தொடங்கினர். தன்னை மும்பை கொலாபா காவல்துறையைச் சேர்ந்தவர் என கூறிய ஒருவர், ஆள்கடத்தல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி மிரட்டியுள்ளார்.

பின்னர், இரண்டு பெண்களும் ‘டிஜிட்டல் கைது’ செய்யப்பட்டதாகக் கூறி, வீடியோ கால் மூலம் தங்களை சிபிஐ அதிகாரிகள் எனக் கூறிய குழுவினர், எச்சரிக்கை கூறி 9 மணி நேரம் வரை வீடினுள் தனிமையில் வைத்துள்ளனர். எந்தவொரு தொடர்பும் இல்லாமல், பயத்தில் இருந்த பெண்கள், இந்த வழக்கிலிருந்து தப்பிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், மோசடிக்காரர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.58,447 பணத்தை அனுப்பியுள்ளனர்.

இதனால் திருப்தி அடையாத மோசடிக்காரர்கள், கைது செய்யப்பட்டவர்களின் உடலில் காயங்கள் உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும் என்ற கோணதிலும், கேமரா முன் இருவரையும் நிர்வாணமாக்கி நின்று காண்பிக்க வைத்துள்ளனர். மேலும், அந்த நேரத்தில் அவர்களை வீடியோவில் இழிவாக பேசி, கேலி செய்த சம்பவமும் நடந்துள்ளது. இது போன்ற செயல்கள் பெண்களுக்கு மிகவும் மனவேதனையையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நடந்த கொடுமையை உணர்ந்த சங்கீதா , இரவு 8 மணிக்கு தனது மற்றொரு தோழியிடம் சம்பவத்தை பகிர்ந்ததையடுத்து, அந்த தோழி உடனடியாக இவ்வனைத்தையும் நிறுத்தி காவல்துறையில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் தான், இருவரும் இது ஒரு மோசடி என்பதனை உணர்ந்துள்ளனர்.

புகாருக்குப் பிறகு, மோசடிக்காரர்கள் மீண்டும் தொடர்பு கொண்டு, அவர்களின் நிர்வாண வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டியதையடுத்து, இருவரும் பனஸ்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்போது இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம், ‘டிஜிட்டல் கைது’ மோசடியின் பேரழிவை வெளிக்கொணர்கின்றது. பொதுமக்கள் இதுபோன்ற தொலைபேசி அழைப்புகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கையளித்துள்ளது.