தமிழ் திரையுலகின் போக்கையே மாற்றி எதார்த்தமான கிராமத்துக் கதைகளைத் தந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அசாத்திய நேர்மை குறித்தும், அவரது பாசமிக்க தந்தை பாசம் குறித்தும் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அண்மைய நேர்காணல் ஒன்றில் நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். பாரதிராஜாவின் முதல் திரைப்படமான ’16 வயதினிலே’ உருவான காலகட்டத்தில், சினிமா பின்புலம் இல்லாத தேங்காய் வியாபாரியான தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு, இவரை நம்பி முப்பத்தையாயிரம் ரூபாயை வழங்கியுள்ளார்.
அந்தச் சமயத்தில் பாரதிராஜாவின் வீட்டில் வறுமை சூழ, அவரது ஒரு வயது மகன் மனோஜிற்குப் பால் வாங்கக்கூடப் பணம் இல்லாமல் அவரது மனைவி தவித்துள்ளார். கையில் தயாரிப்பாளர் கொடுத்த பெருந்தொகை இருந்தபோதிலும், தொழிலுக்குத் துரோகம் செய்யக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில், அதிலிருந்து ஒரு ரூபாய் கூடத் தன் சொந்தத் தேவைக்காக எடுக்க மறுத்து, நண்பரின் உதவி வரும் வரை பொறுத்திருக்குமாறு மனைவியிடம் கூறிவிட்டு நேர்மையுடன் படப்பிடிப்பிற்குக் கிளம்பியுள்ளார்.
தொழிலின் மீது அவர் காட்டிய அந்த அசாத்திய அர்ப்பணிப்புதான் அவரைப் பிற்காலத்தில் உன்னத நிலைக்கு உயர்த்தியது.அதேபோல், திரைக்குப் பின்னால் அவர் எவ்வளவு பாசமிக்க ஒரு தந்தை என்பதற்கும் பாலாஜி பிரபு ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார். தான் அடைய முடியாத நடிகர் என்ற உயரத்தைத் தன் மகன் அடைய வேண்டும் என்று விரும்பிய பாரதிராஜா, சினிமாவின் அடிமட்ட கஷ்டங்களைக் கற்றுக்கொள்வதற்காகத் தன் மகனை இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராகச் சேர்த்தார்.
முதல் நாள் கடுமையான களப்பணிக்குக் பின் நள்ளிரவில் வீடு திரும்பி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மகனின் அறைக்குச் சென்ற பாரதிராஜா, நாள் முழுவதும் நின்று வேலை செய்ததால் மகனின் கால்கள் எவ்வளவு வலிக்கும் என்பதை ஒரு தந்தையாக உணர்ந்து,அவரது கால்களை மெதுவாக அமுக்கிவிட்டுள்ளார். திடீரென விழித்துப் பார்த்துப் பதறிய மகனை அமைதிப்படுத்தி, உன்னைத் தோளில் சுமந்து வளர்த்த எனக்கு இந்த வலி தெரியும் என்று கூறி நெகிழ வைத்துள்ளார்.
ஒட்டுமொத்த கோலிவுட்டையே தன் திறமையால் வியக்க வைத்த ஒரு மாபெரும் ஆளுமை, நள்ளிரவில் தன் மகனுக்காகக் கால் அமுக்கிவிட்ட இந்தச் சம்பவம் அவர் ஒரு சிறந்த தந்தை என்பதை உணர்த்துவதாகத் தயாரிப்பாளர் உருகியுள்ளார்.
