ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே உள்ள திக்லி கிராமத்தில் வியாழக்கிழமை அன்று பார்ப்போரையே நடுங்க வைக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஒரு ஆழ்துளைக் கிணற்றின் தொட்டிக்குள், உலகின் மிக ஆபத்தான விஷம் கொண்ட ‘ரஸ்ஸல்ஸ் வைப்பர்’ (கண்ணாடி விரியன்) வகை பாம்புகள் கூட்டம் கூட்டமாக இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டறிந்தனர். இந்தத் தகவல் காட்டுத்தீ போல பரவியதால் ஒட்டுமொத்த கிராமமே பயத்தில் உறைந்தது.

உடனடியாக வனவிலங்கு மீட்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த மீட்புக்குழுவினர், அந்தத் தொட்டிக்குள் இருந்து பாம்புகளை ஒவ்வொன்றாக மீட்டு எண்ணியபோது, அங்கிருந்த பாம்புகளின் எண்ணிக்கை மொத்தம் 23 ஐத் தொட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், மீட்கப்பட்டவைகளில் 22 குட்டிப் பாம்புகளும், அவற்றின் தாய்ப் பாம்பும் அடங்கும்.

இதுகுறித்து வனவிலங்கு மீட்பு மையத்தின் தலைவர் டாக்டர் சமன் சிங் சவுகான் ஒரு சுவாரசியமான அறிவியல் உண்மையை விளக்கினார். பொதுவாக பாம்புகள் முட்டையிட்டுத்தான் குஞ்சு பொரிக்கும். ஆனால், இந்த ரஸ்ஸல்ஸ் வைப்பர் வகை பாம்புகள் முட்டையிடாமல், பாலூட்டிகளைப் போல நேரடியாகக் குட்டிகளை ஈனும் அரிய வகை உடலமைப்பைக் கொண்டவை. இந்த பாம்புகளின் இனப்பெருக்க காலம் நவம்பர் மாதத்தில் தொடங்கி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் குட்டிகள் பிறக்கும்.

அதனால்தான், தற்போது ஜூன் மாதத்தில் இத்தனை குட்டிகளுடன் தாய் பாம்பு ஒரே இடத்தில் சிக்கியுள்ளது. ஆபத்தான இந்த பாம்புகள் அனைத்தும் பத்திரமாக மீட்கப்பட்டு அடர்ந்த காட்டுப்பகுதியில் விடப்பட்டன. மேலும், பொதுமக்கள் வீடுகளிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ பாம்புகளைக் கண்டால், பயந்துபோய் அவற்றை அடிக்கவோ அல்லது பிடிக்கவோ முயற்சிக்காமல், உடனடியாக மீட்புக்குழுவுக்கு தகவல் தெரிவிக்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.