சிவகாசி அருகே உள்ள நாராயணபுரம் அனுப்பன்குளம் சாலையில் சீனிவாசன் என்பவரின் மகன் கோபிக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று அமைந்துள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 50 அறைகள் உள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி வேலை நடைபெற்று உள்ளது. அப்போது திடீரென வெடி விபத்தை ஏற்பட்டது. இந்த விபத்தில் கார்த்திகை செல்வம்(25), சங்கீதா(43), லட்சுமி(45) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் மாரியம்மாள்(50), நாகலட்சுமி(55) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் 4 அறைகள் தரைமட்டமாகியது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆலையின் மேலாளர் பிரபாகரன், போர் மேன் செல்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பட்டாசு ஆளையின் உரிமையாளரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.