சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென்னிந்தியாவின் மேல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று, ஜூலை 22 ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த தரைக்காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34–35°C, குறைந்தபட்ச வெப்பநிலை 26–27°C ஆக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை:
ஜூலை 22 ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில், மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று, இடைவேளைகளில் 60 கிமீ வரை வீசக்கூடும். அதேபோல், ஜூலை 23 மற்றும் 24ஆம் தேதிகளில், வட தமிழக கடலோரப் பகுதிகளில் இத்தகைய சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் வலியுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவும், வானிலைத் தகவல்களை தொடர்ந்து கவனிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
