தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்க பிரியா (32) என்ற மகள் இருக்கிறார். இவர் பிஎஸ்சி பிஎட் முடித்த நிலையில் இவருக்கும் மதுரையைச் சேர்ந்த பூபாலன் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவீட்டாரும் திருமணம் செய்து வைத்தனர். இதில் பூபாலன் ஒரு தலைமை காவலர் ஆவார்.

இதில் தங்க பிரியா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை ஆகப் பணிபுரிந்து வரும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு 7 மற்றும் ஐந்து வயதில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களின் மகன்களுக்கு பூபாலன் தலா 5 பவுனில் தங்க சங்கிலி போட வேண்டும் என தன்னுடைய மனைவியிடம் கூறியுள்ளார். உன்னுடைய அப்பா வீட்டில் காதணி விழாவின் போது தங்க சங்கிலி போட சொல்லு என அவர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பூபாலன் தன் மனைவியை தாக்கியதில் அதில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.

இதற்கிடையில் பூபாலன் தன் மனைவியை கொடுமைப்படுத்தியது தொடர்பாக தன் தங்கையிடம் சிரித்தபடி கூறி மகிழ்ந்தது தொடர்பான ஒரு ஆடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து தங்க பிரியாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் நேற்று பூபாலனை பணியிடை நீக்கம் செய்த நடவடிக்கை எடுத்தனர்.

அதோடு பூபாலனின் தந்தை செந்தில்குமரன் (விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆய்வாளராக பணிபுரிகிறார்), தாய் விஜயா மற்றும் தங்கை அனிதா உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் பூபாலன் தன் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்ட நிலையில் தனிப்படை போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது பூபாலன் பிடிபட்டுள்ளார். மேலும் தலைமறைவாக இருந்த பூபாலனை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவரது தந்தை செந்திகுமரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.