திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆதம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் கடந்த ஜூலை 12ஆம் தேதி பள்ளி முடித்து நண்பகலில் பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அந்தச் சிறுமி வழக்கம்போல் ரயில்வே பாதையை ஒட்டி செல்லும் வழியாக நடந்து சென்றபோது, ஒரு மர்ம நபர் அவரைப் பின்தொடர்ந்து, கத்தியைக் காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

வன்கொடுமையின்பின் அந்த சிறுமி தனது உயிரைக் காப்பாற்றி தப்பித்துப் பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து வீட்டிற்கு வந்ததும், அவரின் நிலையைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி நேரில் வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்தார். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த கோரி தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் 2022 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.