மதுரை-நெல்லை பேருந்தில் ஏசி வேலை செய்யாமல் பயணிகளுக்கு ஏற்பட்ட அவதிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜேஷ் என்ற நபர், கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி மதுரையிலிருந்து நெல்லை நோக்கி ரூ.190 கட்டணத்தில் அரசு ஏசி பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

ஆனால், அந்த பயணத்தில் ஏசி வேலை செய்யாததால், பயணிக்க வேண்டிய நேரத்தில் மிகவும் சிரமப்பட்டதாகவும், புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என அவர் கூறினார். இதனால் நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், ராஜேஷுக்கு ஏற்பட்ட அவதிக்கு நஷ்டஈடாக ரூ.25,000 மற்றும் வழக்குச் செலவாக ரூ.10,000 என மொத்தம் ரூ.35,000 வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. மேலும், இந்த தொகையை நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் தங்களது சொந்தப் பணத்தில் இருந்து ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயண சேவையின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தீர்ப்பு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.