உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தின் கைர் சாலையில் உள்ள கோண்டா டர்ன் பகுதியில், சாலையோரத்தில் திறந்துவிடப்பட்டிருந்த ஆழமான வடிகாலில் பள்ளி மாணவர் ஒருவர் சைக்கிளுடன் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் மதகு கட்டிய பிறகு, அந்த இடம் பாதுகாப்பாக மூடப்படாமல் விடப்பட்டிருந்தது. இதனால் சைக்கிளில் வந்த மாணவர் சமநிலையை இழந்து நேராக அந்த குழியில் விழுந்துள்ளார். இந்த சம்பவம் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

சம்பவம் நேர்ந்ததும் அருகில் இருந்த பொதுமக்கள் அதனை கவனித்து மாணவரை உடனடியாக வெளியே இழுத்தனர். மாணவருக்கு சிறிய அளவிலேயே காயம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இது ஒரு பெரிய விபத்தாக மாறியிருக்கலாம் என்பதே பொதுமக்களின் பயமாக இருக்கிறது. சாலையோரத்தில் இருந்த அந்த ஆழமான குழிக்கு எச்சரிக்கை பலகை, தடுப்பு வேலி போன்ற எதுவும் இல்லாததால் மக்கள் கடும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவியதும், நகராட்சிக்கு எதிராக மக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். இதன் பின்னணியில் நகராட்சி ஆணையர் பிரேம் பிரகாஷ் மீனா நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பவ இடத்தில் உள்ள திறந்தவெளி வடிகால்கள் விரைவில் மூடப்படும் என்றும், கட்டுமானத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.