கொல்கத்தா ஜடாவ்பூர் பகுதியில், தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஒருவர் மீது இருவர் பலாத்காரம் செய்ய முயன்றதோடு, அசிட் வீசும் மிரட்டலும் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், கிருஷ்ணா கிளாஸ் ஃபேக்டரி அருகே நடந்துள்ளது. ஷூட்டிங் முடித்து வீடு திரும்பும் வழியில் நடிகை தன் நான்கு நண்பர்களுடன் டீ குடிக்க சாலையோரத்தில் நின்றபோது, காரில் வந்த இரண்டு நபர்கள் எதுவும் காரணமின்றி அவரை மது போதையில் அவதூறாக பேசத் தொடங்கினார்கள்.
நடிகையின் நண்பர்கள் இதை கண்டித்தபோது, இருவரும் அவர்களை தாக்கியதோடு, நடிகையை இழுத்துச் செல்ல முயன்றதாகவும், அதைத் தடுக்க முயன்ற அனைவரையும் அசிட் வீசுவதாக மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நடிகையின் நண்பர்கள் தங்களைத் தாக்கியதாக பதில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரும் தற்போது போலீசால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், கொல்கத்தா மக்களிடையே பெரும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில், “பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே?”, “தெருவில் கூட டீ குடிக்க முடியாத நிலை!” என கோபம் பொங்குகிறது. தற்போது இந்த நடிகைக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பான விசாரணை தொடர்வதாக ஜடாவ்பூர் போலீஸ் ஸ்டேஷன் தகவல் தெரிவித்துள்ளது.
