பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் ஜஸ்மயில் சிங் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து  வருகிறார். இந்நிலையில் சிறு வேலை காரணமாக பெரோஷ்பூருக்கு சென்றிருந்தார். அங்கு லாட்டரி டிக்கெட்டை ரூ. 6 கொடுத்து வாங்கிய நிலையில் வீட்டிற்கு திரும்பினார். மறுநாள் அவரது மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், “உங்களுக்கு லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசாக அடித்துள்ளது” என்று கூறினார். அதைக் கேட்டவுடன் ஜஸ்மயில் சிங் இன்ப அதிர்ச்சடைந்த நிலையில் தனது குடும்பத்தினருக்கு தெரிவித்தார். அதன் பின் இசை வாத்தியங்கள் முழங்க ஜெஸ்மயில் தனது குடும்பத்தினருடன் தனக்கு ஏற்பட்ட அதிர்ஷ்டத்தை கொண்டாடினார். பின்னர் இனிப்புகள் வாங்கி அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுத்தார்.

இது குறித்து ஜஸ்மயில் கூறும்போது, “எனக்கு கிடைத்த பணத்தை வைத்து நான் எனது ரூ. 25 லட்சம் கடனை அடைத்து விடுவேன். மீதமுள்ள தொகையை எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும், அவர்களது படிப்பிற்காகவும் பயன்படுத்துவேன்” என்று கூறினார். மேலும் கூலித் தொழிலாளியான ஜஸ்மயில் சிங்க் ஒரே நாளிலேயே கோடீஸ்வரரான சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.