நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 90க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அதில் பழங்குடியின மாணவர்களும் அடங்குவர். இந்நிலையில் 33 க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.

அவர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று காலை 33 மாணவர்களுக்கும் விடுதியில் உணவு பரிமாறப்பட்டது. அதை சாப்பிட்டு முடித்த பின் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்குச் சென்ற நிலையில் சற்று நேரத்தில் மாணவர்களுள் சிலர் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.

அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.