வாஷிங்டன் மாநிலம், அமெரிக்கா: குழந்தை ஆபாசப் படங்களை வைத்திருந்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த குர்ஜீத் சிங் மால்ஹி (வயது 42) என்ற நபர், அமெரிக்காவின் சியாட்டிலில் அமலாக்கப் படையினரால் (ICE) கடந்த ஜூலை 11ஆம் தேதி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஐசியின் அதிகாரப்பூர்வ X (முன்னர் ட்விட்டர்) கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “CSAM எனப்படும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மால்ஹி கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கூட்டாட்சி சட்ட அமலாக்கப் பிரிவுகள் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் மால்ஹி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கைது, பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், மால்ஹி பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களுடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவுகின்றன. பாஜக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள், ஆளும் ஆம் ஆத்மி கட்சி (AAP) தலைவர்கள், அமைச்சர் ஹர்பால் சீமா, சபாநாயகர் குல்தார் சந்த்வான் உள்ளிட்டோர்களுடன் மால்ஹி இணைந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கேள்வி எழுப்பி வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் சுக்பால் சிங் கைரா, மால்ஹியின் மீது கடும் விமர்சனம் மேற்கொண்டு, அவரை “வெட்கக்கேடான குற்றவாளி” எனக் குறிப்பிட்டார். மேலும், மால்ஹியுடன் முதலமைச்சர் பகவந்த் மானின் குடும்பத்தினருக்கும் உள்ள தொடர்புகளைத் தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாடலுடன் மால்ஹி இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. மால்ஹியின் இந்த தொடர்புகள் குறித்து ஆம் ஆத்மி கட்சியிடம் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம், பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.