நாடு முழுவதும் மாநில அரசுகளால் பதிவு செய்யப்பட்ட இறப்புப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போது வரை 1.20 கோடி மரணமடைந்த நபர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளன. இது, மரணித்துப் போன நபர்களின் ஆதார் எண்கள் பொது மற்றும் தனியார் துறைகளில் மோசடி, ஊழல், மற்றும் அடையாள முறைகேடுகளுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் எடுத்த நடவடிக்கையாக மத்திய அரசு விளக்கியுள்ளது.

இது தொடர்பாக UIDAI (ஆதார் நிர்வாகக் கண்காணிப்பு ஆணையம்) தெரிவித்திருப்பதாவது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மரணச் சான்றிதழுடன் அருகிலுள்ள ஆதார் பதிவுக் மையத்தில் சென்று, அந்த நபரின் ஆதார் எண்ணை முடக்க அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கலாம். தற்போது வரை இந்த செயல்முறை ஏற்கனவே உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், கேரளா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக மாநிலங்களின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் துறைகளுடன் UIDAI ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையால், அரசாங்க உதவித் திட்டங்களில் இறந்த நபரின் பெயரில் தொடரும் தொகை பெறுதல், வங்கி மோசடி, சொத்து சிக்கல்கள் போன்றவை கணிசமாக கட்டுப்பட முடியும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மரணப் பதிவுகளுக்கும் ஆதார் தரவுகளுக்கும் இடையே நேரடி இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, முறைகேடுகள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.