சென்னைக்கு அருகே தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை தாம்பரம் ரயில்வே நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளது. இங்குள்ள தண்டவாளத்தில் ரயில் இன்ஜின் ஒன்று ரயில் பெட்டிகளை எடுத்துச் செல்வதற்காக நின்று கொண்டிருந்தது.
இந்நிலையில் இரவு 9 மணி அளவில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இன்ஜின் மீது ஏறி வெகு நேரமாக நின்று கொண்டிருந்தார். அவர் அப்படியே நின்று கொண்டிருந்ததால் அப்பகுதியில் இருந்தவர்கள் மின்சாரத்தில் அடிபட்டு இறந்து விட்டாரா? என்ற சந்தேகத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர். ஏராளமானோர் அப்பகுதியில் கூடியதால் ரயில்வே சுரங்க மேம்பால பகுதியில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த தகவல் தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இன்ஜின் மீது ஏறி நின்ற பெண்ணை பாதுகாப்பாக கீழே இறக்கினர். தற்போது அந்தப் பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
