சென்னை காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக முன்னணி தலைவர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடும் விமர்சனங்களை பதிவு செய்தார்.
“தமிழகம் முழுவதும் தற்போது நடைப்பெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பயணத்திற்கு உண்மையான பெயர் ‘பொய்களுடன் ஸ்டாலின்’ என்பதுதான் பொருத்தமாக இருக்கும். தேர்தல் நேரத்தில் மட்டுமே முதலமைச்சருக்கு மக்கள் கண்ணுக்கு தெரிகின்றனர். அதுவும், போட்டோ, வீடியோவுக்காக,” என்று ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். “மனுக்களுக்குச் சாவி வைத்திருந்தவர் ஸ்டாலின் தான்… ஆனால் இப்போது மக்களையே தவிர்த்து வருகிறார்!”
ஏற்கனவே எதிர்கட்சி நிலையில் ஸ்டாலின் பெட்டி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை வாங்கியதாக நினைவுபடுத்திய ஜெயக்குமார், “அப்பொழுது சாவியை அவரே வைத்திருந்தார்… முதலமைச்சராக ஆனபின், ‘நான் மனுக்களை நேரில் படித்து நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறியவர் இன்று பொதுமக்களை சந்திக்க தயங்குகிறார். ‘எனது அறைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்’ என்ற வாக்குறுதி என்ன ஆனது?” என கேள்வி எழுப்பினார்.
“கடந்த 4 ஆண்டுகளில் ஒரு முறையாவது தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் பொதுமக்களை நேரில் சந்தித்ததுண்டா?” என்றும், “தற்போது தமிழகத்தில் போலீசும், அதிகாரிகளும் தான் ஆட்சி நடத்துகிறார்கள்; மக்கள் சார்ந்த நிர்வாகம் இல்லை” எனவே, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கு பதிலாக, ‘பொய்களுடன் ஸ்டாலின்’ என்றே மக்கள் அழைக்கின்றனர்” என ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார்.
