சீனாவின் குவாங்சி மாகாணத்தை சேர்ந்த 26 வயது ஹுவாங் என்ற பெண், தனது இரு குழந்தைகளையும் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.10 லட்சம் மதிப்பிலான தொகையை பெற்றுக்கொள்வதற்காக, அந்த பெண் தன் மகன்களை முறையே 2020 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் விற்றதாகவும், அந்த பணத்தை ஆடம்பர பொருட்கள் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் ஹோஸ்ட் களுக்கு டிப்ஸ் கொடுக்க பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

முதலில், 2020 அக்டோபரில் தனது முதல் மகனை ஹுவாங், தனது உறவினரான லி என்பவரிடம் 45,000 யுவானில் (சுமார் ₹5 லட்சம்) விற்றுள்ளார். அந்த குழந்தையின் தந்தை யாரென்று தெரியாததால் வளர்க்க முடியவில்லை என்றும், பொருளாதார குறைபாடும் இருந்ததால் விற்றதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் பிறகு, 2022-ஆம் ஆண்டு மற்றொரு குழந்தையை பெற்ற பிறகு, பணத்துக்காக மீண்டும் விற்பனைக்கு முயன்ற ஹுவாங், ஒரு முகவரிடம் 38,000 யுவான் (₹4.5 லட்சம்) வாங்கி கொடுத்து அந்தக் குழந்தையையும் விற்றுள்ளார்.

அதன் பின்னர், அந்த முகவர் அந்த குழந்தையை 103,000 யுவானில் (₹12 லட்சம்) மற்றொருவரிடம் விற்றுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து சந்தேகமான மெசேஜ் தகவல்கள் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், 2022 ஏப்ரல் மாதம் குழந்தைகள் இருவரும் மீட்கப்பட்டனர். தற்போது அவர்கள் சமூக நலத்துறையின் காவலில் இருப்பதாகவும், தத்தெடுப்பிற்காக காத்திருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுவாங் மீது மோசடி மற்றும் குழந்தை கடத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, ஜூலை 8, 2025 அன்று ஃபுஜோ ஜின்’ஆன் மாவட்ட நீதிமன்றம் 5 ஆண்டுகள் 2 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும் ₹3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முகவர் மற்றும் குழந்தையை வாங்கிய லி என்பவருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குழந்தையை வாங்கிய லிக்கு 9 மாதங்கள் சிறை, 1 வருடம் தற்காலிக தடை உள்ளிட்ட தண்டனையும், முகவராக இருந்த வேய் என்பவருக்கு 7 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தை கடத்தல் சம்பவங்கள் சீனாவில் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.