நாக்பூரைச் சேர்ந்த டொலி சாய்வாலா எனப்படும் உனில் படில், தனது வித்தியாசமான சாய் பரிமாற்றம் மற்றும் தனித்துவமான தோற்றத்தால் சமூக வலைதளங்களில் மிகுந்த பிரபலமடைந்தவர். மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் கடந்த 2024-ல் புகைப்படம் வெளியானதும், அவர் இந்திய அளவில் வைரலானார். தற்போது “டொலி கி டப்ரி” என்ற தனது பிராண்டை இந்தியா முழுவதும் பிராஞ்சைஸி முறை மூலம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “இந்தியா முழுவதும் ஸ்டால்கள் முதல் கஃபே வரைக்கும் டொலி கி டப்ரி விரைவில் உருவாகும். உண்மையான உற்சாகமும், ஆசையும் கொண்டவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்” என தெரிவித்துள்ளார். இந்த பிராஞ்சைஸி திட்டத்தில் 3 வகை மாடல்கள் உள்ளன:
கார்டு ஸ்டால் மாடல் – ரூ.4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை
ஸ்டோர் மாடல் – ரூ.20 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை
ஃபிளாக்ஷிப் கஃபே – ரூ.39 லட்சம் முதல் ரூ.43 லட்சம் வரை
இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் அவரை பாராட்டியுள்ள நிலையில், சிலர் “பிரபலமானது போதும், வணிகம் சிக்கலாகும்” என சுட்டிக்காட்டி விமர்சனங்களையும் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் சாலைவழி டீ கடைகளுக்கு ஒரு தேசிய பிராண்டாக உருவெடுக்கும் முயற்சி இதுவாகும். “தோழமையான, தேசீ மற்றும் மாபெரும் கனவைச் சாயுடன் சேர்த்து சமைக்கிறோம்” என்றார் டொலி சாய்வாலா. மேலும் இந்தியா முழுவதும் தன்னுடைய டீக்கடையை திறக்கப் போவதாக சொன்ன அவரது புதிய முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
