புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் அருகே அரசூர்பேட் பகுதியை சேர்ந்த வயதான பெண் சகுந்தலா (63). அவரது பேத்தி திவ்யதர்ஷினி.இவர் பெற்றோர்கள் இறந்த நிலையில் தனது பாட்டி சகுந்தலாவுடன் வசித்து வருகிறார்.

மேலும் திவ்யதர்ஷினி வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் வணிக நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திவ்யதர்ஷினி அதே பகுதியை சேர்ந்த ஷியாம் (22) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பில் இருந்து ஷ்யாமுடன் பேசுவதை திவ்யதர்ஷினி தவிர்த்து வந்துள்ளார்.

அதாவது ஷியாம் குடிப்பழக்கத்திற்கு அதிக அடிமை ஆவதாலும், சில நேரங்களில் அநாகரீகமான முறையில் நடந்து கொள்வதாலும் திவ்யதர்ஷினி ஷியாமை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் திவ்யதர்ஷினி செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஷியாம் சென்று தன்னிடம் பேசுமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்த 3 நாட்களாக திவ்யதர்ஷினி வீட்டின் முன்பு கற்களை வீசி  ஷியாம் மிரட்டி வந்துள்ளார். இதனை அடுத்து சம்பவ நாளன்று இரவு பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி திரி வைத்து அவரே வெடிகுண்டை தயார் செய்து திவ்யதர்ஷினி  வீட்டின் முன் கதவில் வீசிவிட்டு தன்னிடம் மீண்டும் பேசாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

குண்டு அதிக சத்தத்துடன் வெடித்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பதறி அடித்து  ஓடி வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த ஷியாம் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதில் வீட்டின் முன் கதவு தீப்பற்றி எரிந்து உள்ளது.

உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இது குறித்து அறிந்த வில்லியனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஷியாமை கைது செய்துள்ளார். அதன் பின்ன அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.